ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை நினைவு படுத்ததான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் எட்டாம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சபையினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாளை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.
மகளிர் தினத்தின் வரலாறு:
வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி தூக்கினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும், பணிகேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!. ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்களித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகவே அவர் பதவி இழந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, "மகளிர் தின"மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!.
இந்த இனிய நாளில் பெண்கள் அனைவரும் சுதந்திரம் பெறவும், ஆண்களுக்கு நிகரான உரிமை பெறவும், பாலியல் கொடுமைகள் நீங்கி பாரதி கண்ட புதுமை பெணாக அனைத்து மகளிரும் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறது வலைத்தமிழ்.காம்.
|