பெண்களை விட ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதற்கான காரணங்களை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் லோவா பல்கலைகழக ஆய்வாளர்கள், மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக, பெண்களை விட, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், இதற்கான காரணங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வு முடிவுகளின் படி, பொதுவாக பெண்களை விட, ஆண்களின் மூக்கு 10 சதவீதம் அளவில் பெரியது. ஆண்களின் உடலில் சதை அதிகமாக உள்ளது. இந்த சதையின் வளர்சிதை மாற்றத்திற்காக அதிக அளவிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களின் உடல் அமைப்பை பொறுத்த வரை, சதையை விட கொழுப்புதான் அதிகம். ஆண்களை விட, பெண்களுக்கு சதை குறைவு என்பதால், அவர்களுக்கு ஆண்களை விட குறைந்த அளவிலான ஆக்சிஜன் போதுமானது. அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது. பொதுவாக, பிறக்கும் குழந்தைகளின் மூக்கின் அளவில் பெரிய மாறுபாடுகள் இருக்காது. ஆண், பெண் குழந்தைகளுக்கு ஒரே அளவிலான மூக்கே காணப்படும். 11 வயது ஆகும் போது, மூக்கின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். 11 வயதைக் கடந்த சிறுவர், சிறுமியரிடம் மூக்கின் அளவில் உள்ள வேறுபாட்டை நம்மால் நன்கு காண முடியும் என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வு ஐரோப்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூக்கின் அளவுகளின் அடிப்படையின் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|